Appam, Appam - Tamil

அக்டோபர் 06 – ஆசேரின் ஆசீர்வாதங்கள்!

“இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்” (உபா. 33:25).

மோசேக்கு நூற்றிருபது வயதானபோது, தனது மரண நாள் சமீபித்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்து, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் கோத்திரம் கோத்திரமாக ஆசீர்வதிக்கத் தீர்மானித்தார். அவர்மேல் கர்த்தருடைய ஆவியானவர் தீர்க்கதரிசன அபிஷேகத்தோடு இறங்கி வந்தார்.

ஆதி. 49-ம் அதிகாரம் யாக்கோபு தன் கடைசி காலத்தில் தன்னுடைய பன்னிரண்டு பிள்ளைகளுக்குத் தந்த ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கிறது. அதேபோல, உபா. 33-ம் அதிகாரத்தில் தேவனுடைய மனுஷனாகிய மோசே இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மேலே சொன்ன வாக்குத்தத்தமும், ஆசீர்வாதமும் ஆசேர் குடும்பத்தாருக்கு உரியதாகும். ஆசேர் என்ற வார்த்தைக்கு மகிழ்ச்சி என்பது அர்த்தமாகும். தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் (பிலி. 4:4). “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே. 8:10). மகிழ்ச்சியாய் இருக்கிறவர்கள்தான் மற்றவர்களை மகிழ்விக்க முடியும்.

“ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்” (உபா. 33:24,25) என்று வேதம் சொல்லுகிறது.

ஆசேரின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிற நீங்கள், உங்களை தேவபெலத்தால் இடைக்கட்டிக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு ஆவிக்குரிய பிரயாணத்தில் இருக்கிறபடியாலும், கரடு முரடான பாதையின் வழியாக கடந்து செல்வதாலும் உங்களுக்கு பெலன் அவசியம். உன்னத பெலனை கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார் (லூக். 24:49).

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது, நிச்சயமாகவே நீங்கள் பெலன் அடைவீர்கள் (அப். 1:8). “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்” (ஏசா. 40:31).

ஆவிக்குரிய ஜீவியத்திலே நீங்கள் ஒருநாளும் சோர்ந்துபோய், பெலவீனத்தோடு தள்ளாடக்கூடாது. நீங்கள் மலைகளையும், குன்றுகளையும் கடந்து செல்லவேண்டும். வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளோடு யுத்தம் செய்து அவற்றை மேற்கொள்ள வேண்டும். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19) என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது.

தேவபிள்ளைகளே, வாழ்க்கைப் பயணத்திலே மேகத்தூணாய் வருபவர் உங்களோடுகூட நடந்துவருகிறார். ஆயிரம் பதினாயிரம் தேவ தூதர்கள் உங்களுக்கு முன் செல்கிறார்கள். கோடான கோடி விசுவாசிகள் சேனை சேனையாக உங்களோடுகூட நடந்துகொண்டிருக்கிறார்கள். பரம கானானைக் கிட்டிச்சேருகிற நேரம் வந்துவிட்டது. “உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நினைவிற்கு:- “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங். 23:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.