அக்டோபர் 02 – காலம் செல்லாது!
“இனி காலம் செல்லாது” (வெளி.10:6)
என்னுடைய தகப்பனார் ஒருமுறை உணவுவிடுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று அவருடைய உள்ளத்தில் “உன் பணம் காணாமற்போகப் போகிறது” என்று யாரோ எச்சரிப்பதுபோன்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே அவர் தன்னிடமிருந்த பணத்தை பிரயோஜனமாய் செலவழிக்கும்படி தீர்மானித்தார்.
அவர் உணவுவிடுதிக்குச் சென்று உண்டவுடன், ஒரு வயதான ஏழை நபருக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். பணத்தை எவ்வளவு வேகமாக செலவழிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக நல்ல காரியங்களுக்காகச் செலவழித்தார். இறுதியில், இன்னும் சில பொருட்களை வாங்கச் சென்றபோதுதான் அவர் வைத்திருந்த மீதி பணத்தை யாரோ பயணத்தின்போது திருடிவிட்டார்கள் என்பது தெரிந்தது.
பணத்தை இழந்த துக்கத்தோடு நின்றபோது, கர்த்தர் அவர் உள்ளத்திலே ஒரு சத்தியத்தை உணர்த்தினார். “மகனே, இது போன்றதுதான் உன் வாழ்க்கை. உன் வாழ்க்கையில் எவ்வளவு அதிகமான நேரத்தைக் கர்த்தருக்காகச் செலவழிக்கிறாயோ அது உனக்கு திருப்தியையும், மன நிறைவையும் தரும். சாத்தான் உன் ஆரோக்கியத்தையும், சுகத்தையும் திருடிச்செல்வதற்கு முன்பு, கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வாயாக” என்பதே அந்த சத்தியம். எத்தனை பெரிய ஒரு காரியத்தை எவ்வளவு எளிதான முறையில் ஆண்டவர் உணர்த்திவிட்டார்!
அது முதற்கொண்டு என் தந்தை கர்த்தருக்காக இரவும் பகலும் உழைக்கத் தீர்மானித்தார். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வீதியிலே நடந்து ‘இயேசு ஜீவிக்கிறார், இயேசுகிறிஸ்துதான் வழியும், சத்தியமும், ஜீவனுமானவர்’ என்றெல்லாம் சத்தமாய் அறிவிப்பார். காலை ஆறு மணியானதும் இரயில் நிலையத்துக்குச் சென்று சுமார் இரண்டாயிரம் துண்டுப் பிரதிகளை விநியோகிப்பார்.
மாலைதோறும் மருத்துவமனை ஊழியத்திற்குப் போய் குறைந்தபட்சம் நான்கு நோயாளிகளையாவது கர்த்தரண்டை வழிநடத்துவார். இரவு நேரங்களில் ஏதாவது வீட்டு ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஊக்கமாய் ஜெபிப்பார். அல்லது கர்த்தருடைய செய்தியை கூட்டங்களில் பகிர்ந்துகொள்ளுவார். ஞாயிற்றுக்கிழமைதோறும் சிறைச்சாலை ஊழியத்திற்குச் செல்வதுண்டு. விடுமுறை நாட்களிலெல்லாம் கிராம ஊழியத்திற்கு மற்ற ஊழியக்காரர்களோடு சேர்ந்து செல்லுவார். அவர் காலத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்
ஒருநாள் ஆண்டவர், “நீ புத்தகங்களை எழுதவேண்டும்” என்று சொன்னார். எனது தந்தையும் முயற்சியைத் தொடங்க, கர்த்தருடைய ஆவியானவர் 800 புத்தகங்களுக்கு மேலாக எழுதி முடிக்க கிருபை செய்தார். இரண்டுமுறை அவரை பயங்கரமான பக்கவாதம் தாக்கி உடலின் வலதுபுறத்தைச் செயலற்றுப்போகச்செய்தது. ஒருமுறை அவரது வாகனம் பயங்கரமான விபத்துக்குள்ளாகி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்காகப் போராடினார். தேவன் அவருக்குக் கொடுத்த பகற்காலம் முடிகிறது என்ற எண்ணம் அவருக்குள் வந்தது. ஆயினும் தேவன் அவருக்கு ஆயுள் நாட்களை நீட்டித்துக் கொடுத்தார்.
தேவபிள்ளைகளே, உலகத்தின் முடிவு காலத்திற்குள் வந்திருக்கிறோம். உலகத்தின் முடிவைக்குறித்து வேதத்தில் எழுதப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் நிறைவேறிவிட்டது. இது கர்த்தரைச் சந்திக்க ஆயத்தப்படுகிற ஒரு காலம். ‘எப்போதும் ஆயத்தமாயிரு’ என்று ஆண்டவர் நம்மை உணர்த்துகிறார்.
நினைவிற்கு:- “பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்” (வெளி.14:15).