நவம்பர் 09 – பரிந்து பேசுகிறவர்!
“கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே” (ரோம. 8:34).
உயிர்த்தெழுந்த கிறிஸ்து ஒருபக்கம் நம்மோடு பேசுகிறார். மறுபக்கம் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். ஒருபக்கம் அவர் நம்மோடு இருக்கிறார். மறுபக்கம் அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வாலிபன், தன் குடும்பத்திலுள்ள ஒன்பதுபேரை மிருகத்தனமாய்க் கொலை செய்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். உலகமே அவன்மீது கோபமுற்றது. அவனுடைய குடும்பத்தினர் அவனை வெறுத்துத் தள்ளினார்கள். ஆனால் அவனுடைய வழக்கறிஞர் அவனுக்காக வாதாடி, அவனுக்காகப் பரிந்து பேசினார். அந்த வழக்கறிஞரிடம் அந்த குற்றவாளி எவ்வளவு நன்றியோடு இருந்திருப்பான்!
இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய குற்றவாளியாய் இருந்தாலும், மாபெரும் பாவியாய் இருந்தாலும், உண்மையான மனஸ்தாபத்தோடு, நருங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு கிறிஸ்துவண்டை வரும்போது அவனுக்கு மீட்பு உண்டு. “இயேசுவே என் பாவங்களையெல்லாம் மன்னியும்” என்று ஒருவன் தன்னைத் தாழ்த்தி, அறிக்கை செய்யும்போது, அவனுக்காக கிறிஸ்து தம்முடைய காயங்களையும், இரத்தத்தையும் பிதாவினிடத்தில் காண்பித்து மன்றாடுகிறார், பரிந்து பேசுகிறார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரியன், குற்றமுள்ள பாவிக்கும், நீதியுள்ள தேவனுக்கும் நடுவாக நின்றான். பாவிக்காக பாவநிவாரணபலியை செலுத்தி, “தேவனே, இவனுடைய பாவங்களை மன்னித்தருளும், அக்கிரமங்களை நினையாதிரும்” என்று தேவனிடத்திலே பரிந்துபேசினான். இன்றைக்கு பிரதான ஆசாரியனாக கிறிஸ்து நின்று ஒருபக்கம் உங்களிடத்திலே பேசி, “போ, இனி பாவம் செய்யாதே” என்கிறார். மறுபக்கம் பிதாவினிடத்திலே பேசி உங்களுக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்றுத்தருகிறார்.
“கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபி. 9:11,12).
சாத்தான் சீமோன் பேதுருவை சுளகினால் புடைக்கிறதுபோல புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டபோது கிறிஸ்து பிதாவினுடைய சமுகத்திலே நின்று, பேதுருவின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடி பேதுருவுக்காக வேண்டிக்கொண்டார் (லூக். 22:31,32). பிதாவோடு பேசின இயேசு, பின்பு பேதுருவிடம்,“நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, உங்களுக்காக பிதாவின் வலதுபாரிசத்தில் உத்திரவாதத்தோடு நின்று பரிந்து பேசுகிற கிறிஸ்துவைப் பாருங்கள்.
நினைவிற்கு:- “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவா. 17:20).