செப்டம்பர் 27 – சோர்வை மாற்றுவார்!
“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசா. 40:29).
சோர்வு என்கிற அனுபவத்தைக் கடந்து போகாத ஒரு மனிதனும் இந்த உலகத்தில் இல்லை. விசுவாசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் சோர்வு வரும். ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் சோர்வு வரும்.
சாத்தான் சோர்வின் ஆயுதத்தை வைத்து விசுவாசிகளைத் தாக்குகிறான். ஆனால் கர்த்தரோ சோர்வின் நேரங்களில் பெலன் கொடுத்து உங்களுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். உற்சாகத்தின் ஆவியைத் தந்தருளுகிறார். அந்த நேரங்களிலெல்லாம் கர்த்தரைத் துதித்து மகிழும்படி ஆனந்த தைலத்தால் அபிஷேகம் பண்ணுகிறார்.
யோனாவின் அனுபவம் என்ன? “என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்” (யோனா 2:7). உங்களுக்கு சோர்வு வரும்போதெல்லாம் உங்களுடைய விசுவாசத்தைத் தட்டியெழுப்பி கர்த்தரை நினையுங்கள். யோனா கர்த்தருடைய சித்தத்திற்கு விலகி ஓடினவர்தான். யோனாவை கடலிலுள்ள மீன் விழுங்கிவிட, மீனின் வயிற்றிலிருந்த யோனாவுக்கு சோர்வு ஏற்பட்டது. அப்பொழுது அந்தச் சோர்வின் மத்தியிலும் கர்த்தரை நோக்கிப்பார்த்து ஊக்கமாய் ஜெபித்தபடியால், மீன் கரையிலே வந்து யோனாவைக் கக்கிவிட்டது. சோர்வு எல்லாம் நீங்கி, உற்சாகத்தோடு நினிவேக்குப் போய் பிரசங்கம்பண்ண ஆரம்பித்தார்.
ஒரு தொழில் அதிபருக்கு நஷ்டத்தின்மேல் நஷ்டம் வந்தபோது சோர்வு அவரைப் பற்றிப்பிடித்தது. உள்ளம் தற்கொலையை நாடினது. அந்த மனச்சோர்வினால் அவருடைய சரீரத்தில் சிகப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றின. அவர் எப்போதும் படுத்தே இருக்கவேண்டும் என்றும் எழுந்து நடமாடக் கூடாது என்றும் மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மிகுந்த மனச்சோர்வோடு ஒரு பேப்பரை எடுத்து, மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினார். “அருமை மனைவியே, நாளை நான் உயிரோடு இருக்கமாட்டேன். என் அடக்க ஆராதனையை நடத்தி விடுங்கள்.”
அவர் எந்த அறையிலே தங்கியிருந்தாரோ, அதற்கு நேர் கீழே ஒரு ஆவிக்குரிய ஆராதனை நடந்துகொண்டிருந்தது. அங்கு விசுவாசிகள் மிகவும் உற்சாகமாய் மகிழ்ந்து துதித்து கர்த்தரைப் பாடி ஆராதித்துக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்ட அவர், மெல்ல இறங்கி அந்த ஜெப அறைக்கு வந்தார். அப்போது அங்கே பிரசங்கித்த ஊழியர், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7) என்ற வசனத்தைக்கொண்டு பிரசங்கித்தார்.
அந்த செய்தி அவருடைய உள்ளத்தைத் தொட்டது. என்னை விசாரிக்க ஒருவர் இருக்கும்போது, நான் ஏன் கவலைப்பட்டு சோர்வடையவேண்டும் என்று எண்ணினார். அவ்வளவுதான் தாமதம். திடீரென்று மடைதிறந்த வெள்ளம்போல தேவனுடைய வல்லமை அவர்மேல் இறங்கினது. உன்னதத்தின் பெலன் அவரை ஆட்கொண்டது. இனி நான் சோர்ந்துபோகமாட்டேன் என்று சொல்லி தன் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டார். அன்று முதல் அவருடைய வாழ்க்கையிலே பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
தேவபிள்ளைகளே, உங்களை விசாரிக்கிற கர்த்தர், உங்களுடைய சோர்வையெல்லாம் மாற்றி, நிச்சயமாகவே ஒரு அற்புதம் செய்வார்.
நினைவிற்கு:- “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங். 55:22).