Appam, Appam - Tamil

செப்டம்பர் 21 – இருதயம் கலங்காதிருப்பதாக!

“தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான் (1 சாமு. 17:32).

பெலிஸ்திய வீரனாகிய கோலியாத்தின் தோற்றம் இஸ்ரவேலர் அனைவரையும் கலங்கப்பண்ணிற்று. ஆனால், தாவீதோ அவனைக் கண்டு கலங்கவில்லை. மாத்திரமல்ல, மற்றவர்களையும் கலங்க வேண்டாமென்று சொல்லித் திடப்படுத்துகிறவராக அவர் இருந்தார்.

மனுஷராய்ப் பிறக்கிற ஒவ்வொருவருக்கும் கலக்கங்களும், பாடுகளும், பிரச்சனைகளும், சோதனைகளும் வருவது இயற்கை. ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் கலக்க நேரங்களில் சோர்ந்துபோகாமல் ஜெயம்பெறும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எந்த ஒரு மனுஷனுடைய கண்கள் பிரச்சனைகளை நோக்கிப் பார்க்காமல், கர்த்தரை நோக்கிப் பார்க்கிறதோ, அவன் ஜெயம் பெற்றவனாக விளங்குவான்.

அன்று சவுலும், அவனுடைய சேனைவீரர்களும் கோலியாத்தை பெரிய இராட்சதராகப் பார்த்தார்கள். ஆனால் தாவீதோ, கர்த்தரை முன்னிறுத்தினார். அதன் காரணமாக கோலியாத்தை மிகவும் சிறியவனாகக் கண்டார். கர்த்தருடைய சேனை தன்னுடைய பட்சத்தில் நிற்கிறதைப் பார்த்தார். கர்த்தருடைய நாமத்தினால் தனக்கு ஜெயம் கிடைக்கும் என்பதை திட்டமாய் விசுவாசித்தார். விளைவுகளைக்குறித்து எண்ணாமல், கர்த்தருடைய வல்லமையைக்குறித்தே எண்ணினார்.

அவர் சோர்ந்துபோகாமல், கர்த்தருடைய நாமத்தினாலே வெற்றியின் வார்த்தைகளைப் பேசினார். அவை வெற்றியின் வார்த்தைகளாக மட்டுமிராமல் விசுவாச வார்த்தைகளாகவும் அமைந்தன. “இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” (1 சாமு.17:46) என்றார்.

பல பிரச்சனைகளினால் உங்கள் உள்ளம் கலங்குகிறதோ? உலக மனுஷன் உங்களுக்கு விரோதமாய் எழும்பி நிற்கிறானோ? உங்கள் உயிருக்குயிரான நண்பனே உங்களுக்கு எதிராக சதி செய்கிறானோ? “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்” (யோவா. 14:1) என்று இயேசு சொல்லியிருக்கிறார். “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31). “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?” (ரோம. 8:33).

தேவபிள்ளைகளே, இப்பொழுதே உங்கள் பிரச்சனைகளைப் பார்த்து, “உலகத்தை ஜெயித்த இயேசுவின் நாமத்தில் நான் உனக்கு விரோதமாக வருகிறேன். உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. எனக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுங்கள். அவைகள் முறிந்து விழுவதை நிச்சயம் காண்பீர்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் வல்லமை உங்களுக்குப் போதுமானது.

நினைவிற்கு:- “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்” (1 சாமு. 17:37).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.