Appam, Appam - Tamil

அக்டோபர் 15 – நீதியுள்ளவன்!

“நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்” (வெளி. 22:11).

வேதத்தின் கடைசி அதிகாரமான வெளி. 22-ல் கர்த்தர் நீதியைக்குறித்தும், பரிசுத்தத்தைக்குறித்தும் அதிகமாய் வலியுறுத்துகிறார். ஆம், வருகையிலே காணப்பட ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நீதியும், பரிசுத்தமும் மிகவும் அவசியம்.

“நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:11,12) என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறார்.

உங்கள் நீதிக்கும், பரிசுத்தத்திற்கும் தக்க பலனை கிறிஸ்து வரும்போது, நிச்சயமாகவே பெற்றுக்கொள்வீர்கள். ஒவ்வொருநாளும் நீதியின்மேலும் பரிசுத்தத்தின்மேலும் தாகமாய் இருந்து, இன்னும் பரிசுத்தம் அடையவேண்டுமே, இன்னும் நீதி செய்யவேண்டுமே என்ற ஏக்கத்தோடு முன்னேறிச் செல்லுங்கள்.

ஒரு காட்டிலே மிக வேகமாய் ஓடக்கூடிய ஒரு மான் இருந்தது. காட்டிலுள்ள எந்த மிருகத்தாலும் அந்த மானுக்கு இணையான வேகத்திலே ஓட முடியவில்லை. ஆனால் ஒருநாள் ஒரு தவளை அந்த மானுக்கு வேகமாக ஓடுவதுகுறித்து சவால்விட்டது. காட்டு மிருகங்கள் சூழ்ந்திருக்க ஓட்டப்பந்தயம் ஆரம்பித்தது. மான் முழு வேகத்தோடு ஓட ஆரம்பித்தபோது, தவளை தாவிக் குதித்து மானின் முதுகிலே ஒட்டிக்கொண்டது.

மானுக்கு இது தெரியவில்லை. தன்னுடைய இலக்கை அடைவதற்கு முன்பாக எங்கே தவளை வருகிறது என்று மான் திரும்பித் திரும்பி பார்த்தது. அதுதான் தக்க தருணம் என்று தவளை மானின் முதுகில் இருந்து வேகமாய் குதித்து, எல்லைக் கோட்டைத் தொட்டு வெற்றி பெற்றது.

நீங்கள் ஒன்று செய்யுங்கள். உங்களுடைய சுயநீதியை மறந்துவிட்டு, கிறிஸ்துவின் நீதியை உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் இந்த உலகத்திலே நீதிமானாய் இருந்து, நீதியின் கிரியைகளைச் செய்து, நீதி நியாயத்தை நிலைநிறுத்தி, தன்னுடைய ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தார்.

பழைய ஏற்பாட்டு நீதிமான்களெல்லாம் தங்களுடைய சுயநீதியை நம்பி, நியாயப்பிரமாணத்தின் நீதியைச் சார்ந்து ஓடினார்கள். அவர்கள் என்னதான் ஓடினாலும், அவர்களுடைய சுயநீதி தேவனுடைய நீதியின் அளவுக்கு வந்து எட்டவில்லை. ஆனால் நாமோ, சுயநீதியிலே சார்ந்திராமல், கிறிஸ்துவின் நீதியையே சார்ந்திருக்கிறோம். அவரோடேயே இணைந்திருக்கிறோம். அவர் உங்களை நீதிமான்களாக்கித் தம்முடைய நீதியை உங்களுக்குத் தரிப்பித்திருக்கிறார். ஆகவே உங்களுடைய ஓட்டம் ஜெயத்துடன் முடியும்.

கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக்கொண்ட அப்.பவுல் தன்னுடைய ஓட்டத்தின் முடிவிலே, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” (2 தீமோ. 4:7,8) என்றார்.

கிறிஸ்துவின் எண்ணற்ற பரிசுத்தவான்களும் சுயநீதியை நிறைவேற்றி நீதிமான்களாய் தங்கள் ஓட்டத்தை முடித்திருக்கிறார்கள். அவர்கள் வைத்துச்சென்ற அடிச்சுவடுகளை சரித்திரத்திலே நாம் காண்கிறோம். உங்களுடைய ஓட்டமும் வெற்றியோடு முடியும்படி கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். கிறிஸ்துவின் நீதியிலே சார்ந்துகொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்” (சங். 118:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.