அக்டோபர் 03 – வருகையின் காலம்!
“மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?” (லூக்.12:56).
நீங்கள் காலத்தை நிதானித்து அறியவேண்டுமென்பது கர்த்தருடைய வாஞ்சையாயிருக்கிறது. வானத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலைகளை பல்வேறு கருவிகளைக்கொண்டு விஞ்ஞானிகள் உடனே அறிந்து தொலைக்காட்சி மூலமாக ஜனங்களுக்கு முன்னறிவிக்கிறார்கள்.
சில கிராமங்களில் உள்ள விவசாயிகள், படிப்பறிவில்லாதவர்களாய் இருந்தாலும் மேகம் செவ்வானமிட்டிருக்கிறதைப் பார்த்து அதைக்கொண்டே மழை பெய்யும் என்பதைக் கூறுகிறார்கள். சுனாமியினால் பெரும் காற்றுடன் கடல் அலைகள் கொந்தளித்து வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மிருக ஜீவன்களெல்லாம் அதை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுகின்றன.
இயேசு சொன்னார், “அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” (மத். 16:2,3). செவ்வானமும் மந்தாரமும் வருகையின் அடையாளங்களாகும். பின்மாரி மழை எங்கும் பொழிந்துகொண்டிருக்கிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எல்லா இடங்களிலும் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதை காண முடிகிறது.
தான் வாழ்ந்த காலத்தில், “காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று நோவா ஜனங்களுக்கு எவ்வளவோ பிரசங்கித்தார். நூற்றிருபது வருடங்கள் ஜனங்களை அன்போடு எச்சரித்துப் பிரசங்கித்துக்கொண்டு வந்தார் என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
ஆனால் ஜனங்களோ, நிர்விசாரமாய் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த எச்சரிப்பின் சத்தத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவில்லை. திடீரென்று பெருமழை பொழிந்தது. வானத்தின் மதகுகளெல்லாம் திறவுண்டன. அந்த வெள்ளம் ஒருபக்கம் பேழையை மேலே உயர்த்தினது. மறுபக்கம் கீழ்ப்படியாத ஜனங்கள்மேல் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்து அவர்களை அழித்தது.
இன்றும்கூட பரிசுத்த ஆவியாகிய பெருமழை எல்லா இடங்களிலும் ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. சபையாகிய பேழையை கிறிஸ்து தன் வருகையிலே உயர்த்தி மத்திய ஆகாயத்திற்குக் கொண்டுசெல்லுவார். மறுபுறம் உலகஜனங்கள்மேல் பயங்கரமான நியாயத்தீர்ப்பு வரும்.
கிறிஸ்து வரும் நாளையோ, நாழிகையையோ குறிப்பிட்டு நாம் சொல்லமுடியாமல் இருந்தாலும், கிறிஸ்துவினுடைய வருகையின் காலம் மிகவும் நெருங்கிவிட்டது என்பதற்கான அடையாளங்களைக் காண்கிறோம்.
தேவபிள்ளைகளே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு கிருபையின் தருணத்தையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுவீர்களென்றால், கிறிஸ்துவினுடைய வருகையின் நாளிலே மகிழ்ச்சியோடு அவருக்கு எதிர்கொண்டு போவீர்கள். கர்த்தரோடு என்றென்றுமாய் வாழுவீர்கள்.
நினைவிற்கு:- “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி. 22:12).