நவம்பர் 29 – போதிக்கிற மனுஷன்!
“உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 94:13).
போதித்தல், ஜனங்களுக்கு எத்தனையோ ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும். சரியானபடி போதித்தால், ஜனங்கள் கண்ணீரோடு மனம்திரும்புவார்கள். பாவ வழிகளையும், பொல்லாத வழிகளையும் விட்டு விலகி, கர்த்தரண்டை வருவார்கள். பாவியை எச்சரித்துப் பேசும்போது, அவன் நரகத்திற்கும், பாதாளத்திற்கும் தப்புவிக்கப்படுவான்.
ஆனால் போதிக்கிற போதனை, வேதத்தைக்கொண்டு போதிக்கிறதாக இருக்கவேண்டும். சிலர் தங்களுடைய அநுபவங்களைச் சொல்லிப் போதிப்பார்கள். சிலர் தத்துவங்களைக்கொண்டு போதிப்பார்கள். சிலர் பழங்காலத்துப் புராணக் கதைகளைச் சொல்லி போதிப்பார்கள். சிலர் தங்கள் எண்ணங்களைக்கொண்டும், தங்கள் கற்பனா சக்தியைக்கொண்டும் பிரசங்கிக்கக்கூடும்.
இவ்வகைப் போதனைகள் எந்த பயனையும் கொண்டுவரப்போவதில்லை. வேதவசனங்கள் மட்டுமே ஆவியும் ஜீவனுமானது. அந்த வேத வசனங்கள் ஆத்துமாவை உயிர்ப்பிக்கக்கூடியது. பேதைகளை ஞானியாக்கக்கூடியது. கர்த்தர் தம்முடைய வசனத்தை அனுப்பி தான் ஜனங்களை குணமாக்குகிறார். கர்த்தருடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தரிசனங்கள் என்ற தலைப்பிலே ஒருவர் எழுதின புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. ஆனால் அவருடைய தரிசனங்கள் எல்லாம் அவருடைய சுயமகிமைக்காகவே எழுதப்பட்டிருந்ததே தவிர, வேதவசனத்தின்படி எழுதப்படவில்லை. ஆசாரியனின் உதடுகளில் அறிவைத் தேடுவார்கள்.
போதகர்கள், வேத வசனங்களை அதிகமாய்க் கற்று, அதை மேற்கோள் காட்டிப் பிரசங்கிக்கவேண்டும். பில்லிகிரகாம் என்ற தேவமனிதனின் ஊழியத்திலே அதிகமான ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கு காரணம் அவர் எதைச் சொன்னாலும், ‘வேதம் சொல்லுகிறது’ என்று மேற்கோள்காட்டி அதிகாரத்தோடு பிரசங்கிப்பார். அது அவருடைய ஊழிய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாய் விளங்கியது.
வேதத்தைக்கொண்டு போதிக்கிறது மட்டுமல்ல, வேதத்தைக் கைக்கொண்டு, அனுபவமாக்கிய பின்பு போதிப்பது நல்லது. இயேசு சொன்னார், “ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப்போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” (மத். 5:19)
இன்று அநேக பிரசங்கிமார் வேதவசனங்களைக் கைகொள்ளாமல் பிரசங்கிப்பதால், கர்த்தருடைய வல்லமை வெளிப்படுவதில்லை. ஆத்தும ஆதாயம் செய்யமுடிவதில்லை. முதலாவது பிரசங்கிக்கிறவர்கள் ஸ்திரப்பட வேண்டும். பின்புதான் சகோதரரை ஸ்திரப்படுத்தமுடியும். அணைந்து கிடக்கிற மெழுகுவர்த்தியால், ஒரு புதுமெழுகுவர்த்தியை பற்றவைக்க முடியுமா? போதிப்பது எளிது; ஆனால் போதிக்கிற போதனைகளின்படி நடப்பதுதான் கடினமானது.
தேவபிள்ளைகளே, சாட்சியோடு கர்த்தருடைய வார்த்தையை எச்சரிக்கையாய் பிரசங்கம்பண்ணுங்கள்.
நினைவிற்கு:- “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்” (மத். 28:20).