நவம்பர் 15 – நேரத்தை வீணாக்காதீர்!
“சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:13,14).
இன்று எங்கு பார்த்தாலும், “வீணாக்காதீர்” என்ற விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. “தண்ணீரை வீணாக்காதீர்.” “பெட்ரோலை வீணாக்காதீர்.” “மின்சாரத்தை வீணாக்காதீர்” என்றெல்லாம் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கூறுகின்றன. ஆனால் வேதமோ, “நேரத்தை வீணாக்காதீர்” என்று அன்போடு ஆலோசனை கொடுக்கிறது.
பூமியிலே மனிதனுக்கு தொடக்கமும் உண்டு, முடிவும் உண்டு. இடையில் இருக்கிற காலம் கொஞ்சம்தான். மனிதனுக்குக் கொடுக்கப்படுகிற பகற்காலமும் சுருக்கமானதுதான். ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் நமது இருதயம் திடீரென்று நின்றுவிட்டால், நித்தியத்திற்குள் செல்ல வேண்டியதிருக்கும்.
தேவபிள்ளைகளே, நாம் கர்த்தருக்காக இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருப்போமாக. அப். பவுல், “நான் பின்னானவைகளை மறக்கிறேன். முன்னானவைகளை நாடுகிறேன். கிறிஸ்து இயேசு அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று சொல்லுகிறார். ஆம், நமக்கு இளைப்பாறுதல் இந்த பூமியில் இல்லை.
நாம் இந்த உலகத்தில் வாழ்வது ஒரே ஒரு முறை என்பதால் இரவும் பகலும் அந்தகார லோகாதிபதியோடும், வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் இடைவிடாது யுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும். மறுபுறம் சுவிசேஷம் கேள்விப்பட்டிராத கிராமங்களுக்குச் சென்று சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும்.
யுத்தத்திற்குச் செல்லவேண்டிய காலத்தில், தாவீது நேரத்தை வீணாக்கிக்கொண்டு உப்பரிகையின்மேல் உலாவினதினால் அந்த சோம்பலான நேரம் தாவீதைப் பாவத்திற்குள் இழுத்துச் சென்றது. “சோம்பலுள்ளவனின் இருதயம் சாத்தானின் தொழிற்சாலை” என்பது பழமொழி.
அந்த பாவச் செயல், தாவீதின் வாழ்க்கையிலே பயங்கரமான சாபங்களைக் கொண்டுவந்து, ஆழமான தழும்புகளை ஏற்படுத்திவிட்டது. அவனுடைய மனைவிமார் எல்லோரும் சூரிய வெளிச்சத்திலே பகிரங்கமான கொடிய கற்பழிப்புக்குள்ளானார்கள்.
தாவீதுக்குப் பிறந்த மகன் நோய்வாய்ப்பட்டு மரித்தான். ஒரு காலத்தில் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய்க் காணப்பட்ட தாவீது, இப்பொழுதோ புலம்பி அழுது அரண்மனையைவிட்டே ஓட வேண்டியதாயிற்று. அவர் அந்தரங்கத்தில் செய்த பாவம் அவரை வெளியரங்கமாக்கி அவமானத்திற்குட்படுத்தியது.
நீங்கள் வீணாய்ச் செலவழித்த நேரங்களுக்காக கண்ணீரோடு மனஸ்தாபப்பட்டு கர்த்தருடைய இரக்கத்தைக் கேளுங்கள். வினாடிகள், நிமிடங்கள், மணித்துளிகள் எல்லாம் தேவன் உங்களுக்குக் கொடுக்கிற கிருபையின் தருணங்கள். விலைமதிக்க முடியாத வைர முத்துக்கள்.
தேவபிள்ளைகளே, ஒவ்வொரு வினாடி நேரத்தையும் கர்த்தருக்கென்று பயன்படுத்திக்கொள்வீர்களாக.
நினைவிற்கு:- “இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (எபே. 5:6).