Appam, Appam - Tamil

நவம்பர் 14 – செவிகொடுப்பார்!

“ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்” (யோவா. 9:31).

அநேகம்பேர், “கர்த்தர் என்னோடு பேசவில்லையே அவர் என்னோடு பேசுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார்கள். ஆண்டவர் இரண்டு நிபந்தனைகளை இந்த இடத்தில் வைக்கிறதைப் பார்க்கிறோம். முதலாவது, ஒருவர் தேவனிடம் பயபக்தியுள்ளவராய் இருக்கவேண்டும். இரண்டாவது, கர்த்தருக்குச் சித்தமானதை அவர் செய்யவேண்டும்.

ஒரு சகோதரி தன்னுடைய குடும்ப ஆசீர்வாதத்திற்காக உபவாசமிருந்து ஊக்கமாய் ஜெபித்துக்கொண்டிருந்தார். கர்த்தர் அவரோடு பேசி, “உன் சகோதரிமேலுள்ள கசப்பையும் வெறுப்பையும் எடுத்துப்போட்டு ஒப்புரவாகிவிடு” என்று பேசினார். ஆனால் இந்தச் சகோதரிக்கு அது பிரியமில்லை. அவர் உள்ளத்தில் நிறைய கசப்புகளும், வைராக்கியங்களும் இருந்தன. தன்னைத் தாழ்த்தி சகோதரியினிடத்தில் போய் மன்னிப்பு கேட்கவில்லை.

அதன் பின்பு அந்த சகோதரி அநேக விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் கர்த்தர் முன்பாகக் கொண்டுவந்தபோது, ஒன்றுக்கும் கர்த்தர் பதில் கொடுக்கவில்லை. இதனால் அந்தக் குடும்பத்தில் அநேக ஆசீர்வாதங்கள் தடைப்பட்டன. பிள்ளைகளால் படித்து முன்னேற முடியவில்லை. திருமணமாகவில்லை. எதிலும் தடை, எல்லாவற்றிலும் தடை. அவர்கள் ஜெபிக்கும்போதெல்லாம் “முதலாவது உன் சகோதரியோடு ஒப்புரவாகு” என்று கர்த்தர் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் இறுதிவரை ஒப்புரவாகிக்கொள்ளவில்லை.

இயேசுகிறிஸ்து பிதாவினுடைய எல்லா நீதியையும் நிறைவேற்றத் தன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் பெற்றபோது பிதாவின் சத்தத்தைக் கேட்டார். “இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்”. இன்றைக்கும் இந்தச் சிறிய ஞானஸ்நான கட்டளையை கூட நிறைவேற்றாத எண்ணற்ற கிறிஸ்தவர்கள் உண்டு. அவர்களோடு கர்த்தர் பேசுவது எப்படி?

இயேசு சொன்னார், “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத்.7:21). ஒன்றைத் திட்டமாய் அறிந்துகொள்ளுங்கள். தேவசித்தத்தின்படி இல்லாத ஊழியன், தேவசித்தத்திற்கு மாறாக உரைக்கும் தீர்க்கதரிசனம், தேவசித்தத்தின்படி இல்லாத அற்புதங்கள் எல்லாமே அக்கிரமச் செய்கையாயிருக்கும். ஒருநாள் கர்த்தர் அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” (மத்.7:23) என்று சொல்லுவார்.

கர்த்தருடைய சித்தத்தைக் கேட்டு, அவருக்குச் செவி கொடுத்து, அவருடைய சித்தத்தின்படி செய்கிற மனுஷன் பாக்கியவான். அவனுடைய உள்ளத்தில் எப்போதும் மனநிறைவு இருக்கும். உலகம் கொடுக்கவும் எடுக்கவும்கூடாத சந்தோஷம் இருக்கும். அவன் பூமியிலே வாழ்நாளெல்லாம் கர்த்தரைப் பிரியப்படுத்தி நித்தியத்திலே தேவ சமுகத்தில் இருப்பான்.

இயேசு சொன்னார், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத். 7:24).

நினைவிற்கு:- “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவா. 2:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.