நவம்பர் 13 – சிநேகிதனுக்கு!
“நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?” (ஆதி. 18:18).
ஆபிரகாம் ‘கர்த்தருடைய சிநேகிதன்’ என்று அழைக்கப்பட்டார் (யாக். 2:23). ஆகவே கர்த்தர் பத்துமுறை ஆபிரகாமுக்குத் தரிசனமானார். பலமுறை தாமாகவே வலிய ஆபிரகாமைத் தேடி வந்து ஒரு சிநேகிதனைப்போல பேசினார். அவரது சொப்பனங்களிலும் பேசினார்.
ஆண்டவருக்கு சிநேகிதர் தேவை. கர்த்தருடைய பாரங்களை ஏற்றுக்கொண்டு, அவரோடு இணைந்து ஜெபிக்கிற சிநேகிதர்களை அவருடைய கண்கள் தேடுகின்றன. சோதோம் கொமோரா பட்டணம் அழிக்கப்படுவதைக்குறித்து கர்த்தர் ஆபிரகாமோடு பேசினபோது, ஆபிரகாம் உடனே முழங்கால்படியிட்டு, “நீதிமான்கள் அழிக்கப்படக்கூடாது” என்று வைராக்கியத்தோடு ஊக்கமாய் ஜெபம்பண்ணினார்.
ஆபிரகாம்தான் வேதத்திலேயே முதன்முதலில் ஊக்கமான மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுத்தவர். ஆபிரகாம் ஜெபிக்க ஜெபிக்க கர்த்தர் உடனுக்குடன் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். “நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன்” (ஆதி. 18:26) என்று உடனே பதில் சொன்னார்.
மீண்டும் ஆபிரகாம் ஒருவேளை நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால், என்று கேட்டபோது, கர்த்தர், “அதை அழிப்பதில்லை” என்றார். மீண்டும் ஆபிரகாம், “நாற்பது நீதிமான்கள் இருந்தால்” என்று கேட்டதற்கு, கர்த்தர், “நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்” (ஆதி. 18:29). ஆபிரகாம் முப்பது, இருபது, பத்து என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, கர்த்தர் பொறுமையாய் பதில் அளித்துக்கொண்டே இருந்தார்.
இயேசுகிறிஸ்துவினுடைய நாட்களிலே அவருடைய சீஷர்கள் அவருக்கு சிநேகிதராய் இருந்தார்கள். இயேசு அன்போடு சொன்னார், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவா. 15:15).
கர்த்தர் உங்களை தம்முடைய சிநேகிதனாக தெரிந்துகொண்டிருக்கிறார். ஊழியக்காரர்களாய் தெரிந்துகொண்டிருக்கிறார். தீர்க்கதரிசிகளாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” (ஆமோ. 3:7).
ஹென்னத் ஹேகின் என்ற பரிசுத்தவானுடைய வாழ்க்கையை வாசித்து மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் தன் வாலிப வயதிலே கர்த்தர் தன்னை நடத்துவதற்கு உண்மையாய் ஒப்புக்கொடுத்து, கர்த்தருடைய சிநேகிதரானார். கர்த்தர் யாருக்காகிலும் விண்ணப்பம் செய்யும்படி அவரிடத்தில் சொல்லும்போது, அவர் பாரமெடுத்து ஜெபிப்பதுண்டு. இதனால் கர்த்தர் மீண்டும் மீண்டும் ஜெப விண்ணப்பங்களைக் கொடுத்து ஜெபிக்கச் செய்வார். அவர் தேவ சமுகத்தில் காத்திருந்து அந்நியபாஷையிலே பேசிக்கொண்டே இருப்பார். பின்பு அந்த பாஷைகளை தனக்குத் தானே மொழிபெயர்த்து, தேவ சித்தத்தை அறிந்துகொள்வார். ஆவியானவரால் வழிநடத்தப்படுவார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சிநேகிதராகும்படி இன்று உங்களை ஒப்புக்கொடுங்கள்.
நினைவிற்கு:- “பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:20).