அக்டோபர் 28 – சீயோன் மலையின்மேல்!
“சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்” (வெளி. 14:1).
கல்லூரிப்படிப்பை முடிக்கும் மாணவர்கள், கடைசி நாளிலே கல்லூரி முதல்வரோடு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கும்போது நடுவிலிருக்கும் தனது ஆசனத்தில் அவர் கெம்பீரமாய் உட்கார்ந்திருப்பார். அவர் அருகே உதவி முதல்வரும் மாணவர்களுக்கு பாடம் எடுத்த பேராசிரியப் பெருமக்களும் அமர்ந்திருப்பார்கள். அதுபோல, சீயோன் மலையிலே நிற்கிறவர்கள் ஒருமனமாய், ஒரே கூட்டமாய் ஆட்டுக்குட்டியானவரோடு நிற்பார்கள்.
சீயோன் மலையின் தரிசனத்தைக் கண்ட அப். யோவான் எழுதுகிறார்: “நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவா. 1:3).
ஆதி அப்போஸ்தலருடைய நாட்களில் அபிஷேகம் ஊற்றப்படுவதற்கு மேல்வீட்டறையிலிருந்த நூற்றிருபதுபேருக்குள்ளும் நல்ல ஒருமனப்பாடும் அன்பின் ஐக்கியமும் இருந்தது (அப். 2:1). பேதுரு தன் பிரசங்கத்தினால் மூவாயிரம்பேரை ஆதாயப்படுத்தியபோது சீஷர்களுக்குள் அன்பின் ஐக்கியம் இருந்தது.
இன்றைக்கு உலகத்திலே நூற்றுக்கணக்கான சபைகள் இருக்கலாம். வித்தியாசமான உபதேசங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்தை பரலோகத்தில் பேரெழுதப்பட்டிருக்கிற சர்வ சங்கமாகிய சபையோடு இணைத்துக்கொள்ளவேண்டும். பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்களோடும் நீங்கள் ஆவியில் ஐக்கியமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். வேதம் சொல்லுகிறது, “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்” (எபி. 12:14).
சீஷர்களுக்குள்ளே அன்பின் ஐக்கியத்தைக் கொண்டுவருவதற்காக கிறிஸ்து பிதாவை நோக்கி ஊக்கமாய் மன்றாடி ஜெபித்ததை யோவான் 17-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் ஜெபித்ததோடும், சீஷர்களுக்கு அறிவுரை கூறியதோடும் நின்றுவிடவில்லை. அவர்களுடைய பாதங்களைக் கழுவ ஆரம்பித்தார். அது தாழ்மைக்கும், அன்பின் ஐக்கியத்திற்கும் அடையாளமாய் இருந்தது. இயேசு சொன்னார், “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” (யோவா. 13:14).
கிறிஸ்து இயேசு காண்பித்த முன்மாதிரியின்படியே ஒருவருக்கு முன்பாக ஒருவர் தாழ்த்தி ஒருவரையொருவர் மேன்மையாக எண்ணக்கடவீர்களாக. பூமியிலே ஒருமனப்படாதவர்கள் பரலோகத்திற்குப்போய் எப்படி ஒருமனப்படமுடியும்? கசப்பையும், வைராக்கியத்தையும் வைத்துக்கொண்டு எப்படி கர்த்தருடைய இராஜ்யத்திற்குள் செல்லமுடியும்?
தேவபிள்ளைகளே, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்தக் கிருபையின் நாட்களைப் பயன்படுத்தி உள்ளத்திலுள்ள எல்லாக் கசப்புகளையும் வைராக்கியத்தையும் எடுத்துப்போட்டுவிடுங்கள். சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு நிற்பதற்குத் தாழ்மை, ஒருமனப்பாடு, அன்பின் ஐக்கியம் ஆகியவை அத்தியாவசியமானவை.
நினைவிற்கு:- “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; …. சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தருடைய வசனமும் வெளிப்படும்” (ஏசா. 2:3).