Appam, Appam - Tamil

செப்டம்பர் 28 – ஒருவருக்கொருவர் அன்பு!

“சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (ரோம. 12:10).

இஸ்ரவேல் தேசத்திலே இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகளுடனிருப்பவன். இளையவன் திருமணமாகாத வாலிபன். அந்த இரண்டு பேரும் கோதுமை அறுவடை செய்து தங்கள் தங்கள் களஞ்சியங்களில் சேர்த்து வைத்திருந்தார்கள். ஒருநாள் இரவுநேரத்திலே இருவருக்குமே தூக்கம் வரவில்லை.

மூத்தவன் நினைத்தான், “ஐயோ! என் தம்பி பாவம், கலியாணம் ஆகாதவன். எனக்காவது இரண்டு பிள்ளைகள். எல்லாருமே சேர்ந்து உழைக்கிறோம். தம்பி நன்றாக இருக்கட்டும்” என்று சொல்லி அந்த இரவிலே தன்னுடைய ஒரு கதிர் கட்டை எடுத்துக்கொண்டுபோய் தம்பியின் களஞ்சியத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டான்.

அதே இரவில் இளையவன் எழுந்து, “என் அண்ணன் பாவம், இரண்டு பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள். பெரிய குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவான்?” என்று எண்ணி அண்ணனுடைய களஞ்சியத்தில் தன்னுடைய ஒரு பெரிய கதிர் கட்டை கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிட்டான். இப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்புகொண்டு அடிக்கடி தானியத்தையும், மற்ற உச்சிதங்களையும் மாற்றி, மாற்றி வைத்துவந்தார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் அவ்வாறே இரண்டுபேரும் தானியத்தைக் கொண்டுபோனபோது ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது. இளையவன் மூத்தவனைக் கட்டி அணைத்துக்கொண்டு, “அண்ணா, உங்களுக்குத்தான் கொண்டுபோகிறேன்” என்று சொன்னான். அண்ணன் தம்பியைக் கட்டியணைத்து, “தம்பி, உனக்குத்தான் கொண்டுபோகிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்றான். இரண்டுபேரும் கட்டித்தழுவி அழுதார்கள். கர்த்தர் அதைப் பார்த்தாராம். “என் பிள்ளைகளுடைய இந்த பட்சமான அன்பின் அஸ்திபாரத்தில் எனக்கு ஒரு ஆலயம் இருக்க வேண்டும்” என்று சொன்னாராம்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் குணாதிசயங்கள் உங்களுக்குள் வரட்டும். கிறிஸ்து தயவாயும், மனதுருக்கமாயும் இருந்து மன்னித்ததுபோல, நீங்களும் மற்றவர்களை மனப்பூர்வமாய் மன்னியுங்கள். “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (கொலோ. 3:13,14).

தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பாகவே இருக்கிற இயேசுவுக்கு நீங்கள் பிள்ளைகள் அல்லவா? ஆகவே, நீங்கள் கிறிஸ்துவின் தெய்வீக அன்பை தரித்துக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கிறது. ‘அபிஷேகம் பெற்றுவிட்டேன். ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன். பரலோகத்திற்கு பறக்கப் போகிறேன்’ என்று சொல்லியும், இருதயத்தில் அன்பு இல்லாவிட்டால் அதனால் என்ன பிரயோஜனம்?

“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:1,2).

நினைவிற்கு:- “தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவா. 4:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.