Appam, Appam - Tamil

செப்டம்பர் 25 – தீங்கில்லை!

“கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்” (சங். 121:7).

தீங்கு நிறைந்த உலகத்திலே நாம் வாழுகிறோம். சூழ்நிலைகளினால் வரும் தீங்குகள், தீய மனிதரால் வரும் தீங்குகள். விபத்துகளாலும், வியாதிகளாலும் வரும் தீங்குகள். வறட்சியினாலும், வெப்பத்தினாலும் வரும் தீங்குகள் ஆகியவை எங்கும் நிறைந்து இருக்கின்றன. ஆனால் கர்த்தர் நம்முடைய மத்தியிலே நின்று எல்லாத் தீங்குக்கும் நம்மை விலக்கிக் காத்துக்கொள்ள வல்லவராய் இருக்கிறார்.

யாபேஸ் என்ற ஏழை வாலிபன் ஒரு நாள் கர்த்தரை நோக்கிக் கண்ணீரோடு ஜெபம்பண்ணினார். “தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்” (1 நாளா. 4:10). அவர் வேண்டிக்கொண்டதை தேவன் அவருக்கு அருளிச்செய்தார்!

நீங்கள் துக்கத்தால் நிறைந்திருக்கிறீர்களோ? பெரிய தீங்கை அனுபவித்து விட்டீர்களோ? யாபேஸைப்போல ஜெபம்பண்ணுங்கள். உங்கள் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுகிற அவர், தீங்கு உங்களைத் துக்கப்படுத்தாதபடிக்கு அவற்றிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார். “இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப். 3:15).

நமக்கு தீங்கு செய்யவேண்டுமென்று நினைக்கிறவன் சாத்தான்தான். அவன் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தீங்கிழைக்க முயற்சிக்கிறான். ஆனால், கர்த்தரோ, அவனுடைய தலையை நசுக்கி அவனுடைய எல்லாத் தந்திரங்களிலிருந்தும் நம்மை விலக்கிக் காப்பார். ஒருநாளும் அவர் சாத்தானுடைய கையிலே உங்களை ஒப்புக்கொடுப்பதில்லை.

நாம் எப்பொழுதும் கர்த்தரோடு நிலைத்திருப்போமாக. கர்த்தருடைய பிரசன்னத்தை நாடுவோமாக. எந்தத் தீங்கும் இல்லாத ஒரு ஆயிரம் வருட அரசாட்சியை கர்த்தர் நமக்காக வைத்திருக்கிறார். கர்த்தர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறபடியினாலே தீங்கு நம்மை அணுகுவது இல்லை. “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசா. 11:9) என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

நீங்கள் யாருக்கும் ஒருநாளும் தீங்கு நினையாதிருங்கள். தீமையாய்ப் பேசாதிருங்கள். தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்பவர்களாய் இருங்கள். நீங்கள் உங்கள் சத்துருக்களை நேசிக்கும்போது, கர்த்தர் உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்வார். வேதம் சொல்லுகிறது, “அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்” (ஏசா. 31:2).

தேவபிள்ளைகளே, நீங்கள் நம்பினவர்கள் உங்களைவிட்டு விலகினாலும், தேவன் உங்களைவிட்டு ஒருபோதும் விலகவேமாட்டார். “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20) என்று அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். அவர் இன்றைக்கும் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவார்.

நினைவிற்கு:- “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதி. 50:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.