செப்டம்பர் 05 – மந்தையின் காலடிகள்!
“ஸ்திரீகளில் ரூபவதியே! …. மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு” (உன். 1:8).
மேய்ப்பனின் காலடிகளைப் பின்தொடர்ந்து, மந்தையிலுள்ள ஆடுகள் செல்லுகின்றன. மேய்ப்பன் எப்போதுமே மந்தையின் முன்னால் கெம்பீரமாய் நடக்கிறான். மேய்ப்பனுடைய கைகளில் உள்ள கோலையும், தடியையும் பார்க்கும்போது, ஆடுகள் உற்சாகமாய் அவனைப் பின்பற்றிச் செல்லுகின்றன.
பழைய ஏற்பாட்டில் அநேக மேய்ப்பர்களுடைய காலடிகளைப் பார்க்கிறோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே என்பவர்களெல்லாம் மேய்ப்பர்கள்தான். அவர்களுடைய காலடிகளையெல்லாம் நாம் பின்பற்றுவோம் என்றால் முடிவிலே அவை கிறிஸ்துவை நோக்கி நம்மை வழிநடத்திக் கொண்டுசெல்லும். இயேசு சொன்னார், “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவா. 10:9) “நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவா. 10:11).
பழைய ஏற்பாட்டின் வழியாக புதிய ஏற்பாட்டிற்குச் செல்லும்போது, அங்கே நல்ல மேய்ப்பனைச் சந்திக்கிறோம். அவருடைய அடிச்சுவடுகளைத்தான் நாம் பின்பற்றவேண்டும். உலகத்தில் அநேகர் குறிசொல்லுகிறவர்களையும், மந்திரவாதிகளையும், ஜோசியர்களையும், மனித தெய்வங்களையும் பின்பற்றுகிறார்கள். இவர்கள் தங்களைப் பின்பற்றுகிறவர்களை பாதாளத்தை நோக்கி வழிநடத்துகிறார்கள். இவர்கள் குருடருக்கு வழி காட்டும் குருடர்களாயிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் பின்பற்றவேண்டிய முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காண்பித்தவர் இயேசுகிறிஸ்து ஒருவரே. அவருடைய வாழ்க்கை ஒன்றுதான் பின்பற்றக்கூடிய பரிசுத்தமான வாழ்க்கையாகும். அவர் நல்ல மேய்ப்பனாய் நமக்கு முன்பாகச் செல்லுகிறார். வேதம் சொல்லுகிறது, “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா 2:13).
ஆடுகளுக்கு முன்பாக நடக்கவேண்டும் என்பதும் ஆடுகள் பின்பற்றி வரக்கூடிய அடிச்சுவடுகளைப் பின்வைத்துப் போகவேண்டும் என்பதுமே ஒரு மேய்ப்பனின் தகுதியாகும். ஆம், பிணியாளிகளைக் குணமாக்க முன்னே நின்றவர் இயேசு. அசுத்த ஆவிகளைத் துரத்த முன்னே நின்றவர் இயேசு. அற்புதங்களைச் செய்ய முன்னே நின்றவர் இயேசு. சிலுவையை நோக்கி, வீரனைப்போல முன்னே சென்றவர் இயேசு. அவர்தான் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்த உத்தமர், அவரையே பின்பற்றுங்கள்.
பழைய ஏற்பாட்டிலே மாமியாரை உத்தமமாய்ப் பின்பற்றி நடந்த மருமகள் ரூத்தைக்குறித்து வாசிக்கிறோம். தன் மாமியாரோடு இருக்கும் கர்த்தர் ஜீவனுள்ளவர் என்று அவள் அறிந்திருந்தாள். எனவேதான், அவள், “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” (ரூத் 1:16) என்று உறுதியாகச் சொன்னாள். தேவபிள்ளைகளே, கர்த்தரையே பின்பற்றுங்கள்.
நினைவிற்கு:- “நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவி கொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்” (ஏசா.51:1).