ஆகஸ்டு 13 – பிரியப்படுத்துங்கள்!
“என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங். 40:8).
முதலாவதாக, கர்த்தரைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்குள் இருக்கவேண்டும். அந்த வாஞ்சை இல்லாவிட்டால் நீங்கள் ஏனோ தானோ என்று ஒரு பெயர்க்கிறிஸ்தவராகவே இருப்பீர்கள்.
கர்த்தர்மேல் உள்ள அன்புதான் அவரைப் பிரியப்படுத்தச் செய்கிறது. அதுவே அவரோடு கரம்கோர்த்து நடக்கவேண்டுமென்ற விருப்பத்தைக் கொண்டுவருகிறது. அப்படி கர்த்தரைப் பிரியப்படுத்தி கரம்கோர்த்து நடக்கும்போது, அவரும் அன்போடு உங்களைப் பார்த்து, ‘நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்றும் என் பிரியமே! நீ ரூபவதி’ என்றும் அழைப்பார்.
சாது சுந்தர் சிங் கர்த்தரோடு இணைபிரியாமல் நடந்தவர். அவருடைய வாழ்க்கையை முழுவதுமாகக் கர்த்தருக்கென்று அர்ப்பணித்தவர். ஒருமுறை அவரை ஒரு இளவரசன் அன்போடு தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அவன் கிறிஸ்தவ மார்க்கத்திலும், ஆன்மீக காரியங்களிலும் அதிக ஈடுபாடு காண்பித்தான்.
அவன் “ஐயா, நான் இயேசு கிறிஸ்துவின்மூலம் எவ்வளவோ ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தும், அவரை வெளிப்படையாக அறிக்கையிடாத என் பெலவீனத்திற்காக வருந்துகிறேன். அவ்வாறு நான் பகிரங்கமாக அறிக்கையிட்டால், என் சொந்த தேச மக்கள் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். என் அரச உரிமையும் பறிபோய்விடும்” என்று சொன்னான்.
சாது சுந்தர் சிங், வாலிபனான அந்த இளவரசனைப் பார்த்து, “நீங்கள் பூமியில் வாழ்வது கொஞ்ச நாட்களே. ஆனால் பரலோகத்தில் வாழப்போவதோ நித்தியமானது. உலக இராஜ்யங்கள் சீக்கிரமாய் கவிழ்ந்துபோகும். நித்திய இராஜ்யங்களோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். நீங்கள் இந்த உலக வாழ்க்கையில் கிறிஸ்துவோடு கரம்பிடித்து நடந்தால், அவர் என்றென்றைக்கும் உங்களோடுகூட கரம்பிடித்து நடக்கும்படி ஒளிமயமான பரலோக இராஜ்யத்திற்குள் கொண்டுசெல்வார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத். 6:33) என்று பதிலளித்தார்.
நீங்கள் தேவன்மேல் பிரியமும், மகிழ்ச்சியுமாய் இருப்பதும், தேவன் உங்கள்மேல் பிரியமும், மகிழ்ச்சியுமாய் இருப்பதும்தான் கிறிஸ்துவ வாழ்க்கையின் உன்னதமான அனுபவம். அப்படி நீங்கள் வாழும்போது, வேதத்தின் ஒவ்வொரு வசனமும் உங்களுக்கு சுவையுள்ளதாகவும், தேனிலும் தெளி தேனிலும் மதுரமுள்ளதாகவும் விளங்கும்.
சங்கீதக்காரர் சொல்லுகிறார், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 1:2). தேவனைப் பிரியப்படுத்தத் தீர்மானித்த தாவீது இராஜா சொல்லுகிறார்; “எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்” (சங். 119:34,35).
தேவபிள்ளைகளே, கர்த்தரைப் பிரியப்படுத்த விருப்பம்கொண்டிருக்கும்போது, சபை கூடுதலும், ஆலய ஆராதனையும்கூட உங்களுக்கு மகிழ்ச்சியின் அனுபவங்களாய் இருக்கும். ஆகவே கர்த்தரை நேசித்து ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதித்து மகிழுங்கள்.
நினைவிற்கு:- “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்” (சங். 90:17).