நவம்பர் 28 – ஆலயப் பிரகாரங்கள்!
“உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்” (சங். 65:4).
ஒரு பெரிய ஆலயத்தின் பாடகர் குழுவில், ஏறக்குறைய ஐம்பது, அறுபதுபேர் இடம் பெற்றிருந்தார்கள். அருமையான இசைக்கருவிகள் அங்கே மீட்டப்பட்டன. அக்குழுவில் ஒரு வயதானவர் இருந்தார். அவர் சிறுவயதிலேயே இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று கர்த்தரை நேசித்து ஆராதித்து வந்தவர். ஆனால் அவருக்கு வயதாகிவிட்டபடியால் அவர் குரல் தழுதழுத்து, கரகரத்து இனிமையாகப் பாட முடியாமல் போய்விட்டது. ஆகவே குழுவின் தலைவர் அவர் சரியாகப் பாடவில்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
அடுத்த வாரம் பாடல் ஆராதனைக்கு முன்பாக, ஒரு தேவதூதன் இறங்கி வந்து, அந்த பாடல் குழுவின் தலைவரைப் பார்த்து, ‘பாடல் குழுவிலிருந்த ஒரே ஒருவரின் இனிமையான குரல்தான் பரலோகத்தை எட்டினது. கர்த்தர் கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த குரலிலே மகிழ்ந்து களிகூர்ந்துகொண்டிருந்தார். அவரை நீங்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்? அவருடைய சத்தத்தைக் கேட்க கர்த்தர் ஆவலோடிருக்கிறார்’ என்று சொன்னான்.
அதற்கு அந்த பாடல் குழு தலைவர், ‘பாடல் குழுவில் மீதி ஐம்பதுபேர் இருக்கிறார்களே. அழகான ராகத்தோடு, நல்ல குரல்வளத்தோடு இனிமையாய் பாடுகிறவர்கள் இருக்கிறார்களே’ என்று பதிலளித்தார். அதற்கு அந்த தேவதூதன் ‘அவர்கள் யாருடைய சத்தமும் பரலோகத்துக்கு எட்டவில்லை. காரணம் அதிலே ஒருவராவது இரட்சிக்கப்படவில்லை. ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரை ஆராதிக்கவில்லை. அவர்கள் குரல் எத்தனை இனிமையாயிருந்தாலும், அந்த ஆலய கூரைக்குமேலே அவை செல்லுவதில்லை. முழுமனதோடு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பாடல்களுக்குதான் கர்த்தர் செவிசாய்க்கிறார். அவர் துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிற கர்த்தர்’ என்றான்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆலயம் தேவனுடைய வீடாகும். அவருடைய வீட்டின் நன்மையினால் திருப்தியாக வேண்டுமானால், அவருடைய பிரகாரங்களுக்கு வந்து அவருக்கு ஆராதனை செய்யுங்கள். அவர் அங்கே உங்களை சந்தித்து, உங்கள் குறைகளை நிறைவாக்குவார்.
உங்களுடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறவரை, சந்திக்க நீங்கள் ஆலயத்துக்கு வரவேண்டும் அல்லவா? “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது? அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்” (சங். 133:1,3).
தாவீது இராஜா தன்னைத் தாழ்த்தி, “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங். 27:4) என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களை நாடுவீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
நினைவிற்கு:- “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங். 84:10).