Appam, Appam - Tamil

நவம்பர் 27 – துன்பப்படுத்துகிறவர்களுக்காக!

“உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத்.5:44).

ஜெபவீரனும் நம்முடைய ஜெபத்திற்கு முன்மாதிரியுமானவருமான இயேசு கிறிஸ்து ஜெபத்தைக்குறித்து முதன்முதலில் பேசிய வார்த்தைகள் இதுதான். “உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (மத். 5:44).

பொதுவாக தங்களுடைய சத்துருக்களுக்காகவும், தங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஒருவரும் மன்றாடுவதில்லை. அவர்களுடைய ஜெபம் எல்லாம் அவர்களுக்காகவும், அவர்களுடைய பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்காகவுமே அமைந்திருக்கும். ஆனால் இயேசு கிறிஸ்து ஜெபத்திலே சத்துருக்களுக்காக ஜெபிப்பதையே முதன்மையாக வைக்கிறார். அதைப்பற்றிதான் முதல் போதனையைக் கொடுத்தார்.

சத்துருக்களுக்காகவும், சபிக்கிறவர்களுக்காகவும், நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டுமானால் முதலாவது மன்னிக்கிற சிந்தனை உங்களுடைய உள்ளத்தில் வர வேண்டும். இயேசு கல்வாரிச் சிலுவையிலே தொங்கும்போதுகூட சத்துருக்களுக்காக ஜெபித்து, “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று வேண்டிக்கொண்டார் அல்லவா? அந்தக் கிறிஸ்துவின் சிந்தையை, மன்னிக்கும் தயாள குணத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். எந்தக் கசப்புக்கும், வைராக்கியத்திற்கும் இடங்கொடாதிருங்கள்.

யோபுவின் புத்தகத்திலே முதல் நாற்பது அதிகாரங்களை வாசிக்கும்போது அவருடைய சிநேகிதர்கள் தங்கள் வார்த்தைகளினால் அவரைப் புண்படுத்தினார்கள். ஆனால் யோபு பக்தன் செய்தது என்ன? அவர்களுக்காக ஜெபம்பண்ணி வேண்டுதல் செய்தார். இதனால் கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார். யோபு இழந்துபோன எல்லாவற்றையும் இரண்டு மடங்காகப் பெற்றுக்கொண்டார் (யோபு 42:10).

அநேகர், “சகோதரனே, என்னுடைய மாமியாருக்காக அல்லது மருமகளுக்காக என்னால் ஜெபம்பண்ணவே முடியாது” என்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்காகவே, பரிசுத்த ஆவியானவரை பிதாவானவர் உங்களுக்குள் தங்க வைத்திருக்கிறார். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது (ரோம. 5:5) என்று வேதம் சொல்லுகிறது.

நம்முடைய இருதயத்திலே ஊற்றப்பட்டிருக்கிற தேவ அன்பினால் நாம் நிச்சயமாகவே நம்மைப் பகைக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்க முடியும். இன்று முதல் தேவ அன்பினால் நிறைந்து உங்கள் சத்துருக்களுக்காக ஜெபியுங்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் சத்தியத்தை எப்பொழுதும் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் எந்த பாவியையும் நேசிக்கிறார். எல்லாக் கொடூரமானவனுக்காகவும் அவர் மரித்திருக்கிறார். பொல்லாதவர்களுக்காகவும் அக்கிரமக்காரருக்காகவும் தம்முடைய இரத்தத்தை சிந்தியிருக்கிறார். ஒருவராவது அழிந்துபோவது அவருக்குப் பிரியமில்லை. “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்” (எசே. 33:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நினைவிற்கு:- “அவர் …. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்” (ஏசா. 53:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.