நவம்பர் 11 – தேவசமாதானத்தின் மூலம்!
“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோ. 3:15).
கர்த்தர் பலவிதங்களில் நம்மோடுகூட பேசுவார். பலவேளைகளில் கர்த்தர் நம் உள்ளுணர்வுகளின் மூலமாக நம்மோடு பேசுவார். மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறபடியால் (நீதி. 20:27) உங்களுடைய ஆவியின் உணர்த்துதலின் மூலமாய்த் தேவ வழிநடத்துதலை அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் உங்களிடத்தில் பேசும்போது, உங்களுடைய உள்ளத்தில் பரிபூரண சமாதானம் குடிகொள்ளும். சந்தோஷமும் மனநிறைவும் அடைவீர்கள்.
நீண்டகாலம் திருமணமாகாமல் இருந்த ஒரு சகோதரிக்கு, திருமணம் ஒழுங்கானபோது, அந்த சகோதரி திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு என்னிடம் ஜெபிக்க வந்தாள். அவளிடத்தில் நான் சகோதரியே, “எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தபோது நீ சம்மதிக்காமல், இந்த மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்தது எப்படி?” என்று கேட்டேன்.
அதற்கு அவள், “மற்ற மாப்பிள்ளைகள் வரும்போதெல்லாம் என்னுடைய உள்ளத்தில் கலக்கமும், பயமும் இருக்கும். ஆனால் இந்த மாப்பிள்ளை வந்தபோது, என் உள்ளுணர்வுகளெல்லாம் இவர்தான் கர்த்தர் உனக்கு நியமித்த மாப்பிள்ளை என்று உணர்த்தினது. பூரண தெய்வீக சமாதானம் என் உள்ளத்தில் வந்தது. என் தாயாரும்கூட, இந்த வாலிப மகனைப் பார்க்கும்போது, என் உள்ளத்தில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. உன்னை கண்கலங்கவிடாமல் கடைசிவரை அன்பாய் வைத்துக்கொள்வான் என்று என் மனதில் தோன்றுகிறது என்று சொன்னார்” என்று பதிலளித்தாள்.
வேதம் சொல்லுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோம. 5:1). சமாதானத்தில் மூன்று பகுதிகள் உண்டு. முதலாவது, தேவனிடத்தில் சமாதானம். இரண்டாவது, தேவனோடு சமாதானம். மூன்றாவது, தேவனுடைய சமாதானம். ஆம், உள்ளம் சமாதானமாயிருந்தால் கர்த்தர் பேசினார் என்று அறிந்துகொள்வீர்கள்.
ஆனால் தேவனுடைய சத்தமாய் இல்லாமல் இருக்கும்போது, உள்ளத்தை பயமும், கலக்கமும் மேற்கொள்ளுகின்றன. அப்பொழுது அது கர்த்தர் பேசியதில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். “பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோம. 8:15). “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).
கர்த்தர் உங்களோடு பேசுவதற்கு எப்பொழுதும் தேவனோடு உறவாடி மகிழ்ந்துகொண்டிருங்கள். உங்களுக்கும் தேவனுக்கும் இடையே எந்த பாவமும் குறுக்கிட்டுவிடாதபடி மிகுந்த ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருங்கள். எப்பொழுதும் பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டு, தேவனோடுகூட சம்பாஷித்து உறவாடுங்கள்.
தேவபிள்ளைகளே, தேவசித்தம் செய்யும்போதும், தேவசத்தம் கேட்கும்போதும், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).
நினைவிற்கு:- “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).