Appam, Appam - Tamil

ஜூலை 20 – கனம்பண்ணு!

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (யாத். 20:12).

நியாயப்பிரமாணத்தில் பத்துக் கட்டளைகள் இருந்தாலும், ஒரே ஒரு கட்டளைமட்டும்தான் வாக்குத்தத்தத்தோடு இணைந்ததாயிருக்கிறது. உன் தகப்பனையும் தாயையும் நீ கனம்பண்ணினால், உன் நாட்கள் நீடித்திருக்கும் என்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் தருகிறார். இங்கே கட்டளையுடனே ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் இணைந்திருப்பதைப் பாருங்கள்.

சிலர், என் தாய் எனக்குத் துரோகம் செய்தாள். என் தகப்பன் என்னை கொடூரமாய் நடத்தினார் என்று பெற்றோரைக் குறைசொல்லி முறுமுறுக்கக்கூடும். ஆனால், நீங்கள் அறியாத குழந்தைப்பருவத்தில் இருந்தபோது, தாய் தன் இரத்தத்தையே பாலாக்கி ஊட்டியதையும், தகப்பன் பாடுபட்டு சம்பாதித்துக் கொடுத்து, உங்களை வளர்க்கச்செய்ததையும் அப்படிப்பட்டவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். கர்த்தர் வேதத்தில் கொடுக்கிற கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கனம்பண்ணுங்கள்.

ஏதோ கொஞ்சம் பணத்தைப் பெற்றோருக்கு மாதந்தோறும் கொடுத்துவிடுவது அவர்களைக் கனம்பண்ணுவதாகாது. அன்புள்ளத்தோடு அவர்களிடம் பேசுவதும், அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கிச் செலவிடுவதுமே அவர்களைக் கனம்பண்ணுவதாகும்.

உங்கள் முதிர்வயதில் உங்கள் பிள்ளைகள் உங்களைக் கவனிக்கவேண்டுமென்று நீங்கள் விரும்பும்போது, அதையே நீங்கள் உங்கள் பெற்றோருக்கு செய்யவேண்டும் அல்லவா? “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” (நீதி. 1:8,9).

இன்று பல வாலிபர்கள் தங்கள் துணையைத் தேடும்போது மனமும் மாம்சமும் விரும்பினபடி ஒரு வாழ்க்கைத்துணையைத் தெரிந்தெடுத்துவிட்டு பின்னர் அவதிப்படுகிறார்கள். பெற்றோரின் ஆலோசனையைக் கேட்பதில்லை. உங்கள்மேல் அக்கறையுள்ள பெற்றோருக்கு உங்களைக்குறித்த ஒரு நோக்கமும், ஒரு திட்டமும் இருக்கும். சுயமாகச் செயல்பட்டு அவர்களுடைய மனதை நோகப்பண்ணாதிருங்கள். அவர்களுடைய அன்பை முறித்துவிடாதிருங்கள்.

ஈசாக்கைப் பாருங்கள். அவருக்கு நாற்பது வயதானபோதும் தன் தகப்பனே தனக்கு வாழ்க்கைத்துணையைத் தேடித்தரவேண்டுமென்று பொறுமையுடன் இருந்தார். கர்த்தர்தாமே மிகச்சிறந்ததை தெரிந்தெடுத்துக் கொடுத்தார்.

அதே நேரத்தில் தாவீதின் குமாரனாகிய அப்சலோமைப் பாருங்கள். தான் ராஜாவாக வேண்டுமென்ற பேராசையினால் தன் தகப்பனுக்கு விரோதமாக எழுந்தான். தகப்பனைத் துரத்தினான். தகப்பனின் மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்து கர்த்தருக்கு அருவருப்பானதைச் செய்தான்.

முடிவில் அவன் கர்வாலி மரத்தில் உயிரோடு தொங்க வேண்டியதாயிற்று. அப்பொழுது யோவாப் மூன்று வல்லயங்களை எடுத்து, அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான். யோவாபின் பத்து சேவகர்கள் அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள் (2 சாமு. 18: 14,15). தேவபிள்ளைகளே, எவ்வளவு வேதனையான மரணம் இது!

நினைவிற்கு:- “தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்” (யாத். 21:15,17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.