ஆகஸ்டு 14 – குணமாக்குகிறார்!
“படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்” (சங். 41:3).
வேதத்திலே பலவிதமான படுக்கைகளை நீங்கள் பார்க்கமுடியும். எலியா சோர்ந்துபோய், சூரைச்செடியின் கீழே படுத்திருந்தார். தேவசித்தம் செய்யப் பிரியப்படாமல், திசைமாறிப் பயணம் செய்த யோனா கப்பலில் படுத்திருந்தார். பின்பு கர்த்தரிடம் கோபித்துக்கொண்டு ஆமணக்குச் செடியின்கீழ் படுத்திருந்தார். சிம்சோன், வேசிகளின் மடியிலே, சிற்றின்ப படுக்கையிலே படுத்திருந்தார். இப்படியாகப் பலர் பல காரணங்களுக்காகப் படுத்திருந்தாலும், ஒரு படுக்கை நம் கவனத்தையெல்லாம் ஈர்க்கிறது.
அந்தப் படுக்கை பெதஸ்தா குளத்தின் அருகே இருந்தது. ஒரு மனிதன் முப்பத்தெட்டு வருஷ காலமாய் வியாதியஸ்தனாய், நம்பிக்கையையெல்லாம் இழந்து அங்கே படுத்துக்கிடந்தான். பெதஸ்தா குளத்திலே அநேகம்பேர் சுகம் பெற்றுப்போகிறதைப் பார்த்தான். ஆனால் அவனுக்கு உதவி செய்து குளத்தில் கொண்டுபோய் இறக்கிவிடவோ ஒருவரும் இல்லை.
“படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்” என்ற வசனத்தின்படி, இயேசுகிறிஸ்து இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் அந்தப் பெதஸ்தா குளத்தண்டை வந்து, அன்போடு அவனை நோக்கி, ‘சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா?’ என்று கேட்டு, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்” (யோவா. 5:8,9) என்று வேதத்தில் பார்க்கிறோம்.
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். பல வேளைகளில் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற ஆரோக்கியத்தின் மேன்மையை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை! கர்த்தரை நன்றியோடு துதிப்பதில்லை. வியாதிப்படுக்கையில்தான் ஆரோக்கியத்தின் ஆசீர்வாதங்களையெல்லாம் எண்ணுகிறோம்.
வியாதியின் நேரத்தில் விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் எல்லா மருத்துவர்களிலும் பெரிய மருத்துவர். “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரே. 32:27) என்று அவர் கேட்கிறார்.
தாவீது வியாதிப்படுக்கையில் இருந்தபோது, அவன் எப்பொழுது மரிப்பான் என்று ஒரு கூட்டம் காத்திருந்தது. வியாதிப்படுக்கையில் இருக்கும்போது, சிலர் வந்து அவிசுவாச வார்த்தைகளைச் சொல்லி சோர்ந்துபோகப்பண்ணுவார்கள். அந்த நேரம்தான் தங்கள் குடும்பப் பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளைப்பற்றி பேசுவார்கள். ஆனால் நீங்களோ, “நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்” (சங். 118:17) என்று விசுவாசத்துடன் பேசுங்கள்.
“தேவனே, நீர் என் ஆயுளை நீடிக்கப்பண்ணினால் நான் உமக்குச் சாட்சியாய் இருப்பேன். உமக்கு ஊழியம் செய்வேன். உமது நாமத்தை உயர்த்துவேன்” என்று பொருத்தனை செய்யுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்கள் ஆயுளை நீட்டிக்கப்பண்ணுவார். வியாதியின் படுக்கையை மாற்றி நல்ல சுகம், பெலன், ஆரோக்கியம் தந்தருளுவார்.
நினைவிற்கு:- “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேது. 3:10,11).