Appam, Appam - Tamil

ஆகஸ்டு 04 – விண்ணப்பத்தைக் கேட்பவர்!

“நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் (1 இரா. 9:3).

வாலிபனாய் இருந்த சாலொமோன், கர்த்தர்மேல் அளவற்ற அன்பு வைத்து, அவருக்கு மாபெரும் தேவாலயத்தைக் கட்டினார். அதைப் பிரதிஷ்டை செய்யும்போது, அவர் செய்த நீண்ட ஜெபத்தை 1 இரா. 8:22-53 -ல் காணும் வேதப்பகுதியில் காண்கிறோம். அது ஒரு எளிமையான ஜெபம். மனந்திறந்து கர்த்தரிடத்தில் பேசுவதே கருத்தான ஜெபமாகும். நிச்சயமாக அந்த ஜெபத்திற்கு பதில் உண்டு.

‘தேவனே, யார் யார் உடைந்த உள்ளத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து, கண்ணீரோடு உம்மை நோக்கி கதறி ஜெபிக்கிறார்களோ, அந்த ஜெபத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், செவிகள் கவனிக்கிறவைகளுமாய் இருக்கட்டும்’ என்பதே சாலொமோனின் விண்ணப்பமாயிருந்தது.

தூரதேசத்திலிருந்து இந்த ஆலயம் இருக்கும் திசையை நோக்கி ஒருவேளை ஒரு பாவியோ, ஒரு பின்மாற்றக்காரனோ, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழையோ, எதிரிகளால் தோற்கடிக்கப்பட்ட ஒருவனோ ஜெபிக்கலாம். மழை இல்லாத நேரங்களிலோ, வாதை நோய் தாக்கிய நேரங்களிலோ மக்கள் ஜெபிக்கலாம். அப்படிப்பட்டவர்களின் விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் கர்த்தர் கேட்டு, மனமிரங்கி, அங்கீகரித்தபோது சாலொமோனுக்கு எத்தனை மகிழ்ச்சி உண்டாயிருக்கும்!

தேவபிள்ளைகளே, நீங்கள் மனமுடைந்து தேவாலயத்திற்குபோய் கர்த்தருடைய பலிபீடத்தண்டை முழங்கால்படியிட்டு, மனம்கசந்து அழுது ஜெபிக்கிற ஒரு ஜெபத்தைக் கர்த்தர் நிச்சயம் கேட்டு பதிலளிப்பார். உங்களுடைய கண்ணீரைப் புறக்கணித்துவிட்டு, ஒருபோதும் கடந்து செல்லுகிறவர் அல்ல. உங்கள் கண்ணீர் அவருடைய துருத்தியில் இருக்கிறது. நிச்சயமாகவே அவர் மனதுருகி, ஒரு அற்புதத்தைச் செய்வார்.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பொல்லாத மனிதன் ஒரு பொய்யை ஜோடித்து, ஒருவருடைய வீட்டை அபகரித்து, மோசமான ரௌடிகளிடம் விற்றுவிட்டான். இதன் விளைவாக அந்த பாதிக்கப்பட்டவர் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நிறைய பயமுறுத்தல்களும், மிரட்டல்களும் அவருக்கு வந்தன.

ஒருநாள் ஒருவன் டெலிபோனிலே அருவருப்பான கெட்ட வார்த்தைகளினால் அவரைத் திட்டினான். அவருடைய மனம் உடைந்தது. அவர் நேராக கர்த்தருடைய ஆலயத்திற்கு ஓடிச் சென்று, அவனுடைய பொய்யான ஆதாரங்களை விரித்து வைத்து ஜெபித்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தர் அவருடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். “மகனே, கலங்காதே, நீ மலைகளை மிதிக்கும்படி அழைக்கப்பட்டவன். மண்மேடுகளைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்?” என்றார். அதோடு அந்த பிரச்சனை தீர்ந்தது.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு உங்களுடைய உள்ளத்தை முள்போல குத்திக்கொண்டிருக்கிற பிரச்சனை எது? உங்கள்முன்னே மலைபோல நிற்கிற பிரச்சனை எது? அதைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். தேவசமுகத்தில் உங்கள் மனதை விரித்து வையுங்கள். இன்று கண்ட எகிப்தியனை நீங்கள் ஒருபோதும் காண்பதில்லை. எல்லா துன்மார்க்கரின் கைகளினின்றும் கர்த்தர் உங்களை விடுவிப்பார்.

நினைவிற்கு:- “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6