Appam, Appam - Tamil

அக்டோபர் 13 – விசுவாசத்தின் நீதி!

“அவன் (ஆபிரகாம்) கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” (ஆதி. 15:6).

விசுவாசத்தினால் நீதி உண்டாகிறது (ரோம. 10:6). எவ்வளவுக்கெவ்வளவு ஒரு மனிதன், கர்த்தரை விசுவாசித்து, அவரில் சார்ந்துகொள்ளுகிறானோ அவ்வளவுக்கவ்வளவு தேவ நீதியை அவன் சுதந்தரித்துக்கொள்ளுவான். கர்த்தரும்கூட நீதியின் சால்வையை அவனுக்குத் தரிப்பிக்கிறார் (ஏசா. 61:10).

இரட்சிக்கப்படுவதற்கு முன்பு ஒரு மனிதன் தன்னுடைய சுயநீதியை நம்பியிருக்கிறான். அது கந்தலான நீதியாய் இருக்கிறது. ஆனால் அவன் தனது அழுக்கான கந்தையை நீக்கிவிட்டு, கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக்கொள்ளும்போது, நீதிமான் என்கிற உன்னதமான நிலைமைக்கு வருகிறான்.

ஒருநாள் ஒரு பிச்சையெடுக்கும் சிறுவன், ஒரு கொட்டாங்குச்சியை பிடில்போல செய்து அழகான இசையை மீட்டிக்கொண்டிருந்தான். இதை ஒரு செல்வந்தரின் மகன் கண்டு, தன்னுடைய பெரிய மாளிகைக்கு அவனை அழைத்துக்கொண்டு வந்தான். அவன் இசையைக் கேட்டு ரசித்துக்கொண்டே இருந்தான். அவனோடு விளையாடினான். அவர்கள் சிறந்த நண்பர்களானார்கள்.

திடீரென்று அந்த செல்வந்தர் அங்கே வந்தபோது, அந்த ஏழைச் சிறுவன் அந்த வீட்டிலுள்ள மகா விலையுயர்ந்த சோபாவில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு மிகவும் கோபம்கொண்டார். “யார் இவன்?” என்று கத்தினார். அவருடைய மகனோ, “அப்பா, தயவுசெய்து கோபப்படாதிருங்கள். இவன் என் நண்பன். அப்பா, நான் இவனை நேசிக்கிறேன்” என்றான் கண்ணீரோடு. தன் மகனுடைய கண்ணீரைக் கண்ட தகப்பனார் கோபம் தணிந்து, “மகனே, அவன் உன்னுடைய நண்பன் என்றால் அவனைக் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தி, உன்னுடைய துணிகளை அவனுக்குக்கொடு. உன்னைப்போல அவன் அழகாய் உடுத்தியிருந்தானானால், அவனை தாராளமாய் வீட்டில் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

நீங்கள் பிதாவினிடம் வரவேண்டும் என்பதற்காகவே குமாரன் தன்னுடைய நீதியை உங்களுக்கு உடுத்துவிக்கிறார். ஞானஸ்நானம் பெறும்போது, கிறிஸ்துவின் நீதியை நீங்கள் தரித்துக்கொள்ளுகிறீர்கள். “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” (கலா. 3:27).

குமாரனாகிய கிறிஸ்து உங்களுக்கு நீதியின் வஸ்திரத்தைத் தரிப்பிக்கவே, தமது இரத்தத்தால் உங்களைக் கழுவி பரிசுத்தமாக்கியிருக்கிறார், நீதிமான்களாக்கியிருக்கிறார். இரட்சிப்பின் வஸ்திரத்தைக் கொண்டுவந்து, “என் சிநேகிதனே, இது உனக்காகவே தயாரிக்கப்பட்ட ஆடையாகும்” என்று சொல்லுகிறார். அன்றைக்கு ஆதாம் ஏவாளின் சுயநீதியாகிய அத்தி இலையை நீக்கிவிட்டு, மிருகத் தோல் உடையை உடுத்தினவர், இன்றைக்கு உங்களுடைய பழைய அழுக்கான சுயநீதியாகிய கந்தைகளை அகற்றிவிட்டு, கிறிஸ்துவின் நீதியைக் கொடுக்கிறார்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய நீதியை தரித்துக்கொண்டதன்பின் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இராஜாதி இராஜாவினுடைய பிள்ளைகள். கர்த்தருடைய சுவிகார புத்திர்ர என்ற அந்தஸ்தோடு தலைநிமிர்ந்து நடவுங்கள்.

நினைவிற்கு:- “எப்படியென்றால், அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவ நீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” (ரோம. 10:3,4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.